கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாபாரதம் என்பது உண்மையில் தென் தமிழ் நாட்டில் சுமார் 5000 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த தமிழர்களின் உண்மை வரலாற்றைத் திரித்து, மறைத்து எழுதப்பட்டதே!

ஆம், மகாபாரதப்போர் தமிழனின் வரலாறே! நடந்த இடம் திருநெல்வேலிக்கருகில் தாமிரபரணி ஆற்றங்கரை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

அதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் உள்ள மயானம் இந்தியாவிலேயே பெரியதாகும். அங்கு 5 பாண்டவர்களும் 100 கௌரவர்களும் புதைக்கப்பட்டிருக்கிருக்கிறார்கள் என்பது அங்குள்ளோர் கருத்து. மயானத்துக்குள் இருக்கும் ஒரு கோயில் பாண்டியராஜன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த மயானத்தில் மகாபாரதப்போரில் இறந்தவர்களையே புதைத்திருக்கவேண்டும்.

2. பாண்டியர்கள் விவசாயிகள். அவர்களே மகாபாரத்தில் பாண்டவர்கள் ஆனார்கள். இந்தியாவில் முதல்முதலாக விவசாயம் செய்தவர்கள் பாண்டவர்களே! நெற்பயிர்கள் விலங்குகளால் அழிக்கப்படுவதால் அங்கே வேலியிட்டு பயிர்களைப் பாதுகாத்தார்கள். அதுவே நெல்வேலி என்று பெயர்பெற்று, திரு என்ற அடைமொழியோடு திருநெல்வேலி என்றழைக்கப்படுகிறது.

3. மகாபாரதப்போருக்கான காரணம் என்ன? பாண்டவர்கள் ஐந்து பேரும் விவசாய நிலக்குடிகள். தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் விவசாயம் செய்தவர்கள். மேற்குப் பகுதி மலைப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் "குறவர்கள்". அவர்களே மகாபாரதத்தில் கௌரவர்கள் என அழைக்கப்பட்டனர். யூத இனத்தைச் சேர்ந்தவர்களான இந்திய பிராமணர்கள் வாயில் குறவர்கள் "கௌரவர்கள்" ஆனார்கள்.

சொல்லாய்வு:
குமரன் = கௌமாரன் ஆனதுபோல்
புத்தம் = பௌத்தம் ஆனதுபோல்
சுகம்=சௌக்கியம் ஆனதுபோல்
குறவர்=கௌரவர் ஆனது.

4. விவசாய மன்னர்களான பாண்டவர்கள் காட்டைக்கொளுத்தி விளைநிலங்களை உருவாக்கினார்கள். இயற்கையை பாதுகாக்கும் பண்புகொண்டவர்களான 100 மலை நாட்டு மன்னர்கள் (குறவர்கள்) இதை எதிர்த்தார்கள். இந்தப் பகையினால் ஏற்பட்ட போரே மகாபாரதப்போர். சமஸ்கிருத மகாபாரதப் போரில் வர்ணிப்பதைப்போல பாண்டவர்கள் நல்லவர்கள், கௌரவர்கள் கெட்டவர்கள் என்ற கோணத்தில் அணுகாமல் இரு தரப்பாருமே அவரவர் நிலைப்பாட்டில் சரியானவர்கள் எனக்கருதுவோம்!

5. கிழக்குப் பகுதிக்கும் மேற்கு மலைப்பகுதிக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் வாழ்ந்தவர்கள் "இடையர்கள்", "ஆயர்கள்". அவர்கள் மாடுமேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் இந்தப் பகுதியில் வாழ்ந்த ஒரு இடையரே! சீரிய கருத்துக்களை உடையவர் என்பதால் அவர் கருத்தினன் எனப்பட்டார். கருத்தினன், கிருத்தினன் ஆகி சமஸ்கிருதத்தில் கிருஷ்ணன் ஆனார். இயேசுவும் சிறந்த கருத்துக்களைக் கொண்டவர் என்பதால் "கருத்தர்" என்றழைக்கப்பட்டு, பின் "கர்த்தர்" என்று அழைக்கப்படுகிறார் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

6. அக்காலங்களில் இயற்கையான வாழ்விடங்கள் உள்ளதால் மக்கள் மலைகளிலேயே வசித்தார்கள். தமிழகத்தின் மேற்குப்பகுதியில் 100 மலை நாடுகளும் அங்கே 100 மலை அரசர்களும் (மலைக்குறவர்கள்) இருந்தார்கள். இன்றும் இன்றைய கேரளத்தில் 100 மலைகளும் அங்கே துரியோதனன் கோயில்களும் உள்ளன.

4. சமஸ்கிருத மகாபாரதக் கதையில் பாத்திரங்கள் சமஸ்கிருதத்தில் வாழ்த்துவதுபோல் அங்கங்கே காணப்படுவது வெறும் கற்பனையே! மகாபாரத வரலாறு நடைபெற்ற 5000 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் தமிழ் மொழியே வழக்கிலிருந்தது. சமஸ்கிருதம் என்ற மொழி தோன்றவேயில்லை.

5. சமஸ்கிருத மகாபாரதக் கதையில் வரும் முக்கிய பாத்திரங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர்களையே தாங்கி நிற்கின்றன. அதைப் பற்றி காண்போம்.

திருதராஷ்டிரன்: 100 மலை நாட்டு மன்னர்களைத் திரட்டி பாண்டவர்கள்மீது போர் தொடுத்ததால் அவர் "திருதிரட்டினன்" என்று அழைக்கப்பட்டு சமஸ்கிருதத்தில் திருதராஷ்டிரன் ஆனார்.

காந்தாரி: திருதராஷ்டிரன் திரட்டிய 100 மன்னர்களையும் பிரிந்துசெல்லாமல் காந்தம்போல் கவர்ந்திழுத்து ஒற்றுமைப்படுத்தி வைத்திருந்ததால் அவள் "காந்தாரி" என்றழைக்கப்பட்டாள்.

துரியோதனன்: "துர்" என்றால் "கெட்ட" என்றும் "ஓதனன்" என்றால் "சொலபவன்" என்றும் பொருள். அதாவது அநியாயம் பேசுபவன் என்று பொருள். கேரள மலை நாட்டு மக்கள் இதை மறுத்து "சுயோதனன்" என்று அழைகின்றனர். சு என்றால் நல்லது, உயர்ந்தது என்று பொருள். அதாவது, நியாயம் பேசுபவன் என்று அர்த்தம்.

துச்சாதனன்: திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்துவந்து சபையில் அவமரியாதை செய்ததால், கெட்ட சாதனை செய்தவன் என்ற பொருளில் அவன் துர்+சாதனன்= துச்சாதனன் என்றழைக்கப்பட்டான்.

துச்சலை: 100 மலை அரசர்களை அடுத்து, 101ஆவதாக துச்சலை என்ற மலை அரசியும் இருந்தாள். துர்+சலம் = துர்ச்சலம் >>> துச்சலை என்று பெயர் பெற்றாள். சலம் என்றால் ஆறு, நீர் என்று பொருள். பெண்ணை ஆறாக வர்ணிப்பது நம் வழமை. இவளும் கெட்டவள் என்று அழைக்கப்பட்டாள்.

சகுனி: "சம்" என்றால் அனைவரும் என்று பொருள். "குனி" என்றால், பாண்டவர்களை சூதாட்டத்தில் தோற்கடித்து அவமானப்படுத்தி தலை"குனிய" வைத்தவர் என்பதால் இவர் "சகுனி" ஆனார்.

கிருஷ்ணன்: கருத்தினன், கிருத்தினன் ஆகி பின் கிருஷ்ணன் ஆனார்.

தருமன்: தா என்ற மூலச்சொல்லில் இருந்து உருவானதே தருமன் என்ற பெயர்...

திரௌபதி: இவர் உண்மையான பெண்ணல்ல. பாண்டவர்கள் தாங்கள் உழுது பயிரிட்ட நிலங்களையே தெய்வமாக வழிபட்டார்கள். தரை+பதி >>> த்ர+பதி = திரௌபதி

பாஞ்சாலி: இதுவும் கற்பனைப் பெயரே. பாஞ்சாலி என்றால் ஐந்து ஆட்களுக்குச் சொந்தமானவள் என்று பொருள். ஐந்து+ஆளி என்பது திரிந்து பாஞ்சாலி ஆனது.

பீமன்: வீ+மான் என்பது பீமன் ஆனது. வீ என்றால் மிகப்பெரிய என்று அர்த்தம். மிகப்பெரிய சக்திகள் கொண்டவர் என்று அர்த்தம்.

கடோத்கஜன்: கடம்+ஒத்த+கஜன். கடம் என்றால் மலை. கஜன் என்றால் யானை. மலையை ஒத்த யானை என்று பொருள்.

சகாதேவன்: சகம் என்றால் அகிலம். தேவன் என்றால் காண்பவன் என்று பொருள். அகிலம் அறிந்தவர், வான சாஸ்த்திரம் தெரிந்தவர் என்று பொருள்.

பீஷ்மர்: வீ+சமர் = பீஷ்மர். வீ என்றால் பெரிய, சிறந்த என்றும் சமர் என்றால் போர் என்றும் பொருள். பீஷ்மரும் மனிதரல்ல; ஒரு உருவகப்பெயரே. மகாபாரதப்போரை பீஷ்மர் என்று உருவகப்படுத்தினார்கள். பீஷ்மர் என்றால் நிகரற்ற போர் வீரர் என்று பொருள்.

குந்தி: வெவ்வேறு ஆட்களுக்கு அவள் பிள்ளை பெற்றதால், கர்ப்பப்பையைக் குறித்து குந்தி எனப் பெயரிடப்பட்டாள்.

அரவான்: தலை அறுபடுபவன் என்பதே "அறுவான்" ஆகி "அரவான்" என மறுவியது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் அரவானித் திருவிழா 18 நாள் நடைபெறும் விழாவாகும். அரவானுக்கு மனைவியாக இருந்ததால் திரு நங்கைகள் அரவானிகள் எனப்படுகின்றனர். அரவான் வழிபாடு தமிழகத்தில் மட்டும் இவ்வளவு சிறப்பாக நடைபெறுவது மகாபாரதப்போர் தமிழ் நாட்டில் நடைபெற்றது என்பதற்கு இன்னுமோர் ஆதாரமாகும்.

இவ்வாறாக மகாபாரதக் கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர்களே. இவற்றின் அர்த்தங்களை நாம் சமஸ்கிருதத்தின்மூலம் தெரிந்துகொள்ள முடியாது.

சமஸ்கிருத மகாபாரதத்திலும் தமிழ்ப்பெயர்கள் காணப்படுவது ஐந்தாம் நூற்றாண்டிலும் வட இந்தியாவின் மொழித்தளம் தமிழே என்பதைக் காட்டுகிறது.


(ஆதாரம்: தமிழ் சிந்தனையாளர் பேரவை ஆராய்ச்சிகள்)